85 மதுபாட்டில்கள் பறிமுதல்
மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பறக்கும் படைக்கு ரகசிய தகவல்
மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், கூறைநாடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
85 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளரும், தேர்தல் பறக்கும் படை அலுவலருமான நடராஜன் மற்றும் போலீசார் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்காக வைத்து இருந்த 85 மதுபாட்டில்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர். பின்னர் அவற்றை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.