புதிதாக மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மேச்சேரி அருகே புதிதாக மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-17 19:00 GMT
சேலம்:-
மேச்சேரி அருகே புதிதாக மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட முயற்சி
மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரிக்கவுண்டனூரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிசாமி தலைமையில் ஆரிக்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுக்கடைக்கு எதிர்ப்பு
மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரிக்கவுண்டனூரில் பள்ளிக்கூடம், கோவில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது மதுக்கடை அமைப்பதற்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே, 2017-ம் ஆண்டு மதுக்கடை இயங்கியபோது சிலர் மது அருந்திவிட்டு பள்ளி மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தி அந்த மதுக்கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் கிராமத்தில் மதுக்கடை வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். எனவே, புதிய மதுக்கடை அமைக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தெத்திகிரிப்பட்டி ஊராட்சியில் புதிதாக மதுக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.சதாசிவமும் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்