நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

Update: 2022-02-17 18:51 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. 

272 வார்டுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 

நகராட்சி பகுதிகளில் 123 வார்டுகளிலும், போளூர் பேரூராட்சியில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்று உள்ளதால் பேரூராட்சி பகுதிகளில் 149 வார்டுகளிலும் என மொத்தம் 272 வார்டுகளில் தேர்தல் நடக்கிறது.

இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 1,214 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கான இறுதி நாளான நேற்று வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

 நாளை வாக்குப்பதிவு

பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் கட்சி சார்ந்த வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். 

தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்