அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி முதியவர் பலி
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி மேலூரை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சிங்கம்புணரி,
அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி மேலூரை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்று சிறப்புமிக்க அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. அரளிப்பாறை மலை அடிவாரத்தில் அருகே பிரமாண்ட தொழுவத்தில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும் அரளிப்பாறை, மருதிபட்டி, எஸ்.வி.மங்கலம், போன்ற பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் ஆங்காங்கே மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். சில காளைகள் பிடிபடாமல் சென்றன. இந்த மஞ்சுவிரட்டை ஆயிரக்கணக்கானவர்கள் அரளிப்பாறை மலையில் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.
மாடு முட்டி முதியவர் பலி
இந்நிலையில் மருதிபட்டி கண்மாய் அருகே அவிழ்த்துவிட்ட மாடு ஒன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுந்தரம் (வயது 60) என்பவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சுந்தரம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.