புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-17 18:20 GMT
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மேட்டுத்தெரு இறக்கத்தில் அண்ணாநகரில் இருந்து வடக்குத்தெரு செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் செல்லும் கால்வாய் மூடி உடைந்து பெரியபள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக  வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன் கால்வாயில் புதிய குழாய் பொருத்தி மூடி போட  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.
பட்டுப்போன மரக்கிளை அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் இந்திரா நகர் அருகில் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தின்  பெரிய கிளை ஒன்று பட்டுப்போய் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் நடுரோட்டில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பட்டுப் போன மரத்தின் கிளையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ்குமார், அறந்தாங்கி.
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த வீடுகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காந்தி நகர் பகுதியில் உள்ள தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் இங்கு வந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகளை கொட்டுவதற்கு ஆங்காங்கே பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவுகளை அகற்றாமல் அப்படியே விட்டிருப்பதால் ஏராளமான கழிவுகள் குவியல் குவியலாக கிடக்கின்றன. இந்த குப்பையால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,  காந்தி நகர், கரூர்.
திறந்தவெளி சாக்கடையால் நோய் பரவும் அபாயம்
திருச்சி மாநகராட்சி 51-வது வார்டு மீன்கார தெருவில் குடியிருப்பு பகுதியில்  சாக்கடை கால்வாய் உள்ளது. சாக்கடை கால்வாயை மூடி தருமாறு பல முறை மாநகராட்சிக்கு தெரிவித்தும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. சாக்கடையிலிருந்து துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி  குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் மூடி அமைத்து நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொதுமக்கள், திருச்சி.
 

மேலும் செய்திகள்