பனியன் நிறுவன தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது

பனியன் நிறுவன தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது

Update: 2022-02-17 17:00 GMT
பல்லடம் அருகே  பனியன் நிறுவன தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலாளி கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் மாரிமுத்து வயது 40. இவர்  பல்லடம் அருகே சேகம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தங்கி இருந்து அந்த நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை  அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார்  தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில்  மாரிமுத்துைவ திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் 25, அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த கார்த்தி 24  ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
கைது 
இவர்கள்  2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில்,  அருள்புரம் பகுதியில் பதுங்கி இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை  செய்தனர். விசாரணையில் அருள்புரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் உதயகுமாரும், கார்த்தியும் வேலை செய்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அதிக மதுபோதையில் இவர்கள் இருவரும்  மோட்டார் சைக்கிளில் அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் சென்றுள்ளனர். அப்போது  அங்கு காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால் மாரிமுத்துவை கீழே தள்ளிய உதயகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி மாரிமுத்துவின் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். 
இதையடுத்து கைதான உதயகுமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கார்த்தியை தனிப்படை போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.
------------

மேலும் செய்திகள்