மூதாட்டியை வெட்டி நகையை பறித்து சென்றவர் கைது

மூதாட்டியை வெட்டி நகையை பறித்து சென்றவர் கைது

Update: 2022-02-17 16:56 GMT
திருப்பூரில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகையை பறித்து சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
மூதாட்டி
திருப்பூர் எம்.ஜி.புதூர் 5-வது வீதியை சேர்ந்தவர் நாகமணி வயது 76. இவர் 3 வீடுகளை வாடகைக்கு விட்டு ஒரு வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 14ந் தேதி காலை வீட்டுக்குள் வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் நாகமணி கிடந்ததை உறவினர்கள் பார்த்தனர்.
இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் மின்விளக்கை அணைத்து விட்டு நாகமணியை அரிவாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் கம்மல், பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.
குடியிருந்த நபர்
போலீசார் நடத்திய விசாரணையில், நாகமணி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த நபர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாகமணியிடம் நடத்திய விசாரணையில், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபரை போல் இருந்ததாகவும் கூறினார்.
அதை வைத்து போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் அவருடைய வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சிவகங்கையை சேர்ந்த ராஜாங்கம் 76 என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
ராஜாங்கம் திருப்பூரில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். டீக்கடையில் பிரச்சினை ஏற்பட அவர் ஈரோட்டில் வேலை செய்து வந்துள்ளார். இதனால் வீட்டை காலி செய்யுமாறு நாகமணி கூறியும், ராஜாங்கம் காலம் கடத்தி வந்துள்ளார்.
தொழிலாளி கைது
சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு வந்தபோது நாகமணி அறைக்கு சென்றுள்ளார். அங்கு பீரோவில் பணம் இருப்பதை கவனித்துள்ளார். பின்னர் மின்விளக்கை அணைத்து விட்டு அங்கிருந்த அரிவாளால் தாக்கி கம்மல் மற்றும் நகையை அவர் பறித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தொழிலாளி ராஜாங்கத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து தங்க கம்மல், ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்