கடலூர் அருகே தொல்.திருமாவளவன் பிரசார வாகனத்தை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
கடலூர் அருகே தங்கள் பகுதிக்கும் வாக்கு சேகரிக்க வரக்கோரி தொல்.திருமாவளவன் பிரசார வாகனத்தை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சியினரும், சுயேச்சைகளும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நெல்லிக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
சாலையில் அமர்ந்து போராட்டம்
அப்போது வைடிப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், திருக்கண்டேஸ்வரம், சோழவல்லி ஆகிய பகுதிகளில் திருமாவளவன் வாக்கு சேகரிக்க வர வேண்டும் எனக்கூறி திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லிக்குப்பத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு கடலூருக்கு புறப்பட்டார்.
பிரசார வாகனத்தை மறித்து...
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் அண்ணாசாலை அருகே திறந்த ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது, மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து எங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வர வேண்டும் எனக் கூறி பிரசார வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருமாவளவன் நிர்வாகிகளிடம் பேசுகையில், இன்று(அதாவது நேற்று) தேர்தல் பிரசாரத்திற்கு இறுதி நாள் என்பதால் கடலூர் மாநகராட்சி பகுதிக்கு செல்ல வேண்டும், ஆகையால் நீங்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். ஆகையால் கட்சி கட்டுப்பாட்டை மதித்து செயல்படவேண்டும் என்றார். இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் வந்தார். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.