ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மாசாணியம்மன் கோவில்
கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பெண்களின் காவல் தெய்வமான மாசாணியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தை அமா வாசையான கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.
மயான பூஜை
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை கடந்த 14-ந்தேதி நள்ளிரவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மயானபூஜையில் எடுத்து வரப்பட்ட பிடிமண் மூலம் 15-ந் தேதி சக்தி கும்பஸ்தாபனம் நிகழ்ச்சி மற்றும் விரதம் இருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, மகாபூஜை போன்றவை நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பொள்ளாச்சி- சேத்துமடை சாலையில் உள்ள குண்டம் மைதானத்தில் 40 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட குண்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சித்திரதேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணிக்கு குண்டம் மைதானத்தை வந்தடைந்தது.
பக்தர்கள் குண்டம் இறங்கினர்
இரவு 10 மணிக்கு செண்டை மேளம் முழங்க வாணவேடிக் கையுடன் குண்டம் பூ வளர்க்கப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆபரண பெட்டியில் சூலாயுதம் மற்றும் பூஜை பொருட்கள், அக்னி கலசத்துடன் அர்ச்சகர்கள், முறைதாரர்கள், அருளாளிகள், விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு புனித நீராடி சிறப்பு பூஜை செய்து விட்டு குண்டம் நடைபெறும் இடத்திற்கு அரளிப்பூ மாலை அணிந்து கொண்டு வந்தனர்.
குண்டத்தில் காலை 9.30 மணிக்கு மல்லிகை பூவினால் செய்யப்பட்ட பூ பந்தை, அம்மன் அருளாளி குப்புசாமி உருட்டி விட்டார். பூ வாடாமல் அப்படியே இருந்தது. தொடர்ந்து தலைமை முறைதாரர் மனோகரன் எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டார். தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முதலில் தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளிகள் அருண், குப்புசாமி ஆகியோர் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பக்தர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரும் தீ மிதித்தார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
குண்டத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாசாணியம்மன் வீற்றிருந்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் தேரில் வீற்றிருந்த மாசாணியம்மனை நோக்கி, மாசாணித் தாயே! காப்பாற்று! என்று கூறியபடி ஓடி வந்தனர். ஒரு சில பக்தர்கள் குண்டத்தில் (பூக்குழியில்) நடந்து வந்து கூடியிருந்த பக்தர்களை பரவசப்படுத்தினர். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், பெண் பக்தர்கள் கையில் குண்டம் பூவை (தனல்) அள்ளி மீண்டும் குண்டத்தில் போட்டு, அம்மனை தரிசித்தனர்.
குண்டம் விழாவை காண லட்சக்கணக் கான பக்தர்கள் வந்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் குண்டம் திருவிழா பக்தர்கள் காணும் வகையில் மைதானத்திற்கு வெளியே பெரிய திரையில் நேரடியாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. குண்டம் விழாவையொட்டி கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. மேலும் குண்டம் திருவிழா வுக்கு வந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன.
மேலும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாசாணியம்மன் கோவிலில் மஞ்சள் நீராடுதல், மகாமுனி பூஜை,மகாஅபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.