சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொதுத்துறை செயலாளரும், தற்போதைய சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியுமான செந்தில்குமாரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொதுத்துறை செயலாளரும், தற்போதைய சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியுமான பி.செந்தில்குமாரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது. சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், டாக்டர்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 35 கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.
36-வது கட்ட விசாரணை
இதைத்தொடர்ந்து 36-வது கட்ட விசாரணை தற்போது தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.
இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஒருநபர் ஆணைய அதிகாரி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.
சிறப்பு அதிகாரி ஆஜர்
4-வது நாளான நேற்று முன்னாள் பொதுத்துறை செயலாளரும், தற்போதைய சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியுமான பி.செந்தில்குமார், ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடம் காலை முதல் மதியம் வரை விசாரணை நடத்தப்பட்டது.
மதியத்துக்கு பிறகு சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆணையம் முன்பு ஆஜரானார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஒருநபர் ஆணையம் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.