அய்யலூர் சந்தையில் ஆடுகளின் விலை வீழ்ச்சி

அய்யலூர் சந்தையில் ஆடுகளின் விலை வீழ்ச்சியடைந்தது.

Update: 2022-02-17 12:09 GMT
வடமதுரை:
வடமதுரை அருகே அய்யலூரில் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இதில் வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். அதேபோல் திண்டுக்கல் மட்டுமின்றி கரூர், திருச்சி போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்க அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் சந்தையில் ஆடுகளின் விலை கடந்த சில வாரங்களை காட்டிலும் வீழ்ச்சி அடைந்து இருந்தது. நேற்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.5 ஆயிரத்துக்கும், செம்மறி ஆடு ரூ.5 ஆயிரத்து 500-க்கும், நாட்டுக்கோழி கிலோ ரூ.300-க்கும் விற்பனை ஆனது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வரத்து அதிகம் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாதது போன்ற காரணங்களால் ஆடுகளின் விலை வீழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். ஆடுகளின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்