நாளை மறுநாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: 11 அடையாள ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்-கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ள தேர்தல் வாக்குப்பதிவில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.;
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ள தேர்தல் வாக்குப்பதிவில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு 176 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பி.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் மொத்தம் 159 வார்டுகள் உள்ளன. இவற்றில் 2 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் 157 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 625 பேர் போட்டியிடுகிறார்கள். தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 190 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 801 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
1,75,530 வாக்காளர்கள்
இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 85 ஆயிரத்து 579 ஆண் வாக்காளர்கள், 89 ஆயிரத்து 936 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 530 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் வாக்கு பதிவிற்காக மொத்தம் 275 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு வைத்திருப்பவர்கள், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் வாக்களிக்கலாம்.
11 ஆவணங்கள்
இதேபோல் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம் அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
எனவே வாக்காளர்கள் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவின்போது ஆள்மாறாட்டங்களை தவிர்க்க இந்த 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.