தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1318 டன் உரம் வந்தது 3 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை
மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1318 டன் உரம் நேற்று வந்தது. இந்த உரத்தை 3 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி:
மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,318 டன் உரம் நேற்று வந்தது. இந்த உரத்தை 3 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1,318 டன் உரம் வந்தது
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் நேற்று 1318 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரத்தை சரக்கு ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணி நடைபெற்றது.
இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விற்பனையாளர் ஜெகதீஷ், மண்டல மேலாளர் மகாலட்சுமி, அலுவலர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது:-
3 மாவட்டங்கள்
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உர கடைகளுக்கு வழங்க 1,318 டன் உரம் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு வந்துள்ளது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உர கடைகளுக்கு 345 டன் உரமும், கூட்டுறவு சங்கங்களுக்கு 150 டன் உரமும் அனுப்பப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உர கடைகளுக்கு 688 டன் உரமும், கூட்டுறவு சங்கங்களுக்கு 110 டன் உரமும் பிரித்து அனுப்பப்படுகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள உரக்கடைகளுக்கு 25 டன் உரம் பிரித்து அனுப்பப்படுகிறது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்துள்ள விலையில் யூரியா உரத்தை பெற்று விவசாய சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.