மணலியில் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தின்போது தே.மு.தி.க. வேட்பாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்
மணலியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தபோது, தே.மு.தி.க. வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார்.
திருவொற்றியூர்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி 20-வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் வேம்படியான் போட்டியிட்டார். தனது ஆதரவாளர்களுடன் அவர், கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
வேம்படியான், தே.மு.தி.க. தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து மணலியில் திறந்த வேனில் நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
மணலி பெரியதோப்பு பகுதியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களோடு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படியான், அண்ணாமலையின் பிரசார வாகனத்தை நிறுத்தி அதில் ஏறினார். அண்ணாமலையிடம் தான் பா.ஜ.க.வில் இணைவதாக தெரிவித்தார். மேலும் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதனால் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், வேம்படியானுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பிறகு அண்ணாமலை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் வேம்படியானும் இணைந்து 20-வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இது குறித்து வேம்படியான் கூறும்போது, “விஜயகாந்த் மீது கொண்ட பாசத்தால் 30 ஆண்டுகளாக விஜயகாந்த் மன்றத்தில் இருந்தேன். தே.மு.தி.க.விலும் தொடர்ந்து இருந்து வந்தேன். தற்போது விஜயகாந்த் செயல்படாமல் இருப்பதால் கட்சியில் இருப்பதில் நாட்டமில்லாமல் எனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்துவிட்டேன்” என்றார்.
பிரசாரத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.