வாணியம்பாடியில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்
வாணியம்பாடியில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்திரா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையின்போது வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.53 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.
அதேபோன்று பர்கூரை சேர்ந்த வியாபாரி தினேஷ் என்பவர் அந்த வழியாக காரில் வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி ரூ.63 ஆயிரத்து 400 கொண்டு சென்றது தெரிந்தது. அந்த பணத்தையும் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.