செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம்: வகுப்பறையில் ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து
செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
ஆனால் மேற்படி மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளார். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.
இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.
இந்தநிலையில், நேற்று காலை வகுப்பறையில் ஆசிரியர் ராஜா ஆனந்த் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.
அவரது சத்தம் கேட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.