கர்நாடகத்தில் 7 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு; ஹிஜாப் அணிந்து வந்ததால் முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

கர்நாடகத்தில் 7 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘புனிதத்தை காக்க கல்வியை துறக்க தயார்’ என கோஷமிட்டனர்.

Update: 2022-02-16 21:54 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் 7 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘புனிதத்தை காக்க கல்வியை துறக்க தயார்’ என கோஷமிட்டனர். 

‘ஹிஜாப்’ விவகாரம்

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ கல்லூரியில் கடந்த 10-ந் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இதனால் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றத்தை குறைக்க மாநில அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்தது. இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. 

இதையடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி, கல்லூரிகளில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பதற்றமான பள்ளி, பி.யூ. கல்லூரி மற்றும் பட்டதாரி கல்லூரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு உத்தரவுப்படி கடந்த 14-ந் தேதி மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டது. 

கல்லூரிகள் திறப்பு 

அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி கூறினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றியது. இதில் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

 இந்த நிைலயில் 7 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நேற்று கர்நாடகம் முழுவதும் உள்ள பி.யூ. மற்றும் பட்டதாரி கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அனைத்து கல்லூரிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேநேரம் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்தால் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயாராக இருந்தது. இந்த நிலையில் பல முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து நுழைந்தனர். அவர்களை கல்லூரி முதல்வர்கள் தடுத்து நிறுத்தி ஹிஜாப்பை கழற்றும்படி கூறினர்.

 ஆனால் அவர்கள் முடியாது என்றனர். கல்லூரி நிர்வாகமும் ஹிஜாப் அணிந்தால் வகுப்பிற்கு அனுமதி கிடையாது என்று கூறிவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்லூரி முற்றுகை 

குறிப்பாக சித்ரதுர்கா மாவட்டத்தில் அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் மற்றும் போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவிகள் கேட்கவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டர் கவிதா நேரில் சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் போராட்டத்தை மாணவிகள் கைவிட்டனர்.

இதேபோன்று உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் 23 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பாலில் எம்.ஜி.எம். கல்லூரி மற்றும் சிவமொக்கா சாகர் அரசு பி.யூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகள் கல்லூரி முதல்வர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். ஆனால் யாரும் அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து ‘அல்லா கூ அக்பர்’ என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிப்பதாக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனர். 

இதை தொடர்ந்து சிவமொக்கா டி.பி.எஸ். கல்லூரி, தாவணகெரே ஹிரிஹரா டி.ஆர்.எம். பி.யூ கல்லூரி, ராய்ச்சூர் அரசு பி.யூ கல்லூரி மற்றும் ராம்நகர், மைசூரு, பெலகாவி, உப்பள்ளி, கொப்பல் மாவட்டம் கங்காவதி, விஜயாப்புரா, சிக்கப்பள்ளாப்பூர், துமகூரு, ஹாசன், மண்டியா, கலபுரகி, யாதகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பி.யூ கல்லூரிகள் உள்பட பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். 

ஹிஜாப்தான் முக்கியம்

இதனால் கோபமடைந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வளாகம் மற்றும் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது மாணவிகள்,‘‘அல்லா கூ அக்பர்‘‘, ‘‘நீதி வேண்டும், நீதிவேண்டும்’’ என்று கோஷமிட்டனர். 

அப்போது அவர்கள் கூறியதாவது:- 
‘‘மழலையர் பள்ளியில் சேர்ந்து படித்தது முதல் ஹிஜாப் அணிந்து வருகிறோம். இதுவரை எந்த தடையும் இல்லை. கடந்த இரண்டு வாரமாகத்தான் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கல்விக்கு இணையாக ஹிஜாப்பை மதிக்கிறோம். தற்போது கல்வியா? ஹிஜாப்பா? என்றால், ஹிஜாப்தான் முக்கியம். ஐகோர்ட்டு எங்களுக்கு நல்ல தீர்ப்பு அளிக்கவேண்டும். இடைக்கால தீர்ப்பை காட்டி எங்களை ஒடுக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் இடம் கொடுக்கபோவதில்லை. ஒரு வேலை ஹிஜாப்பிற்கு நிரந்தர தடை விதித்தால், நாங்கள் கல்லூரியை புறக்கணித்து விடுவோம். ஹிஜாப் என்பது மத அடையாளத்தை தூண்டும் ஆடையில்லை. இது ஒரு புனித ஆடை. புனிதத்தை காக்க கல்வியை துறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’
இவ்வாறு அவர்கள் கூறி கோஷமிட்டனர்.

இதையடுத்து போலீசார் இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருக்கும்படி மாணவிகளிடம் கூறினர். பின்னர் அங்கிருந்து அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்