ஹிஜாப்புக்கு தடை விதித்து பாரபட்சமாக அரசு நடந்து கொள்வது ஏன்?; மனுதாரர் வக்கீல் வாதம்

கர்நாடக ஐகோர்ட்டில் 4-வது நாளாக நடைபெற்ற ஹிஜாப் விவகார வழக்கு விசாரணையில் ஹிஜாப்புக்கு தடை விதித்து பாரபட்சமாக அரசு நடந்து கொள்வது ஏன்? என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

Update: 2022-02-16 21:49 GMT
பெங்களூரு: கர்நாடக ஐகோர்ட்டில் 4-வது நாளாக நடைபெற்ற ஹிஜாப் விவகார வழக்கு விசாரணையில் ஹிஜாப்புக்கு தடை விதித்து பாரபட்சமாக அரசு நடந்து கொள்வது ஏன்? என்று மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

மத அடையாள ஆடைகள்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள், தங்களை வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக இதுபற்றி நீதிபதிகள் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டு இருந்தனர். 

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் இவ்வழக்கு நேற்று 4-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களில் ஒருவரது சார்பில் மூத்த வக்கீல் ரவிவர்மகுமார் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-

மாணவிகள் மீது நடவடிக்கை

அரசால் ஒரு முறை முடிவு செய்யப்பட்ட சீருடை நிறத்தை 5 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீருடை நிறத்தை மாற்றுவதற்கு முன்பு ஒரு ஆண்டுக்கு முன்பே நோட்டீசு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஹிஜாப் அணிந்து வருகிறார்கள் என்பதற்காக மாணவிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல.

கர்நாடக கல்வி சட்டத்தில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கவில்லை. கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் சமத்துவம், ஒற்றுமை மனநிலைக்கு ஹிஜாப் இடையூறாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லூரி வளர்ச்சி குழுவுக்கு சீருடையை முடிவு செய்யும் அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது. கல்வி சட்டத்தில் சில ஆணையங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

கல்லூரி வளர்ச்சி குழு

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிக்கு மட்டுமே சீருடையை முடிவு செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால் கல்லூரி வளர்ச்சி குழு என்பது ஆணையம் கிடையாது. கல்லூரி வளர்ச்சி குழு போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்துகிறது. சீருடையை முடிவு செய்யும் அதிகாரம் கல்லூரி வளர்ச்சி குழுவுக்கு இல்லை. குந்தாப்புரா பி.யூ.கல்லூரி வளர்ச்சி குழுவின் தலைவராக எம்.எல்.ஏ. ஒருவர் உள்ளார். எம்.எல்.ஏ. என்பவர் அவரது கட்சியின் பிரதிநிதியாக இருப்பவர்.

ஒரு கட்சியின் பிரதிநிதிக்கு கல்லுரி நிர்வாக பொறுப்பை வழங்குவது சரியாக இருக்காது. அனைத்து மதத்தினரும் மத அடையாளங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஹிஜாப்புக்கு மட்டும் தடை விதித்து பாரபட்சமாக அரசு நடந்து கொள்வது ஏன்?. கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளின் எண்ணிக்கை குறைவு. அரசின் உத்தரவால் முஸ்லிம் மாணவிகளின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சீருடை தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு ரவிவர்மகுமார் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு(வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்