ஹிஜாப் விவகாரம்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குவாதம் உண்டானது
ஹிஜாப் விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டு இருந்த பி.யூ.சி. உள்பட பிற கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும் ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் சிவமொக்கா, விஜயாப்புரா உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர்.
அவர்களை கல்லூரி நிர்வாகத்தனிர் திருப்பி அனுப்பினர். தங்களால் ஹிஜாப்பை கழற்ற முடியாது என்று அந்த மாணவிகள் கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றனர். சில இடங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் வாக்குவாதம் உண்டானது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மென்மையான போக்கு...
கர்நாடகத்தில் இன்று (நேற்று) கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வந்துள்ளது. கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வந்துள்ளது.
இனிமேல் அரசு மென்மையான போக்கை பின்பற்றாது. அரசியல் சாசனம் மற்றும் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும். கர்நாடகத்தில் அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. 3, 4 இடங்களில் வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு சென்று நிலைமையை சரிசெய்துள்ளனர்.
கல்லூரி வகுப்புகள்
எங்கும் வன்முறை நடக்கவில்லை. அதற்கு அரசு வாய்ப்பும் வழங்காது. சிவமொக்கா கல்லூரியில் வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. அந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளுடன் பேசி அதை சரிசெய்துள்ளனர். மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் இயல்பாக நடந்துள்ளது.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.