‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ரோட்டில் ஓடும் தண்ணீர்
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படவில்லை. அதனால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி அங்குள்ள சாக்கடை நீருடன் கலந்து ரோட்டில் ஓடுகிறது. 2 வாரமாக இதே நிலை நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை பராமரித்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வாய்க்கால் மேடு, கோபி.
அகற்றப்படாத குப்பை
ஈரோடு பெரியசேமூர் பகுதியில் உள்ள எல்.வி.ஆர். காலனியில் பல நாட்களாக குப்பை கொண்டு வந்துபோட்டு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே குப்பையை அகற்ற ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், பெரியசேமூர்.
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் ரோட்டில் கீழ்பவானி கிளை வாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் தண்ணீரில் செடி-கொடிகள் முளைத்து பார்ப்பதற்கு மேய்ச்சல் நிலம்போல் தெரிகிறது. இதனால் தண்ணீர் செல்லாமல் தேங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழ்பவானி கிளை வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
விவசாயிகள், பெரியசேமூர்.
ரோடு போடவேண்டும்
ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகரில் தார் ரோடு போடுவதற்காக ஜல்லிகள் கொண்டுவந்து போட்டார்கள். ஆனால் அதன்பின்னர் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஜல்லிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால் நடந்து கூட செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெரியசேமூர் தென்றல் நகரில் விரைந்து தார்ரோடு போடவேண்டும்.
பொதுமக்கள், தென்றல் நகர்.
தண்ணீர் தொட்டி அருகே குப்பை
டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாப்புதூரில் இருந்து கோபி செல்லும் சாலையில் தண்ணீர் தொட்டி அருகில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் தொட்டி அருகே உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், புஞ்சை துைறயாம்பாளையம்.
தடுமாற வைக்கும் குழி
கோபி சத்தி ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 'ப' வடிவத்தில் குழிதோண்டப்பட்டது. அதன்பின்னர் அதில் மணலை மட்டும் கொட்டியுள்ளார்கள். முறையாக மூடவில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த குழியில் இறங்கி தடுமாறுகிறார்கள். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் இந்த குழியை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குப்பை தொட்டி தேவை
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பாலம் அருகே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொண்டுவந்து நீரோடையில் கொட்டி விடுகிறார்கள். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் அப்பகுதியில் சுகாதாரமும் கெட்டுவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தவுட்டுப்பாளையம் பாலம் அருகே குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.