தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2022-02-16 21:28 GMT
தாளவாடி
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன. 
வெளியேறும் யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். 
பயிர்கள் நாசம்
 இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் வினோத்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. 
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த வினோத்குமார் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட முயன்றார்கள். ஆனால் யானைகள் உடனே வெளியேறாமல் சுமார் 3 மணி நேரம் தோட்டத்திலேயே சுற்றி சுற்றி வந்து கரும்பு பயிர்களை நாசம் செய்தது. 
அகழி அமைக்க கோரிக்கை
அதன்பின்னர் அதிகாலை 2 மணி அளவில் தானாக காட்டுக்குள் சென்றன. யானைகள் சேதப்படுத்தியதில் ½ ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் நாசம் அடைந்தன. 
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, அடிக்கடி யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் வனத்துறையினர் அகழி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். 

மேலும் செய்திகள்