நிதி நிலைமை சீரானதும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும்- ஈரோடு பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நிதி நிலைமை சீரானதும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
ஈரோடு
நிதி நிலைமை சீரானதும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
வரவேற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று ஈரோட்டில் வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த விட்டு நேற்று இரவு ஈரோடு வந்த அவருக்கு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.
தவறு நடக்கக்கூடாது
அவர் பேசும்போது கூறியதாவது:-
அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா... கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தி விட்டீர்களா...
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே நாம் வெற்றி பெற முடிந்தது. 5 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இந்த முறை அப்படிப்பட்ட ஒரு தவறு நடந்து விடக்கூடாது. தி.மு.க. தலைவர், நமது முதல்-அமைச்சர் பதவி ஏற்கும்போது, தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களும் ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு உழைப்போம் என்று கூறி இருக்கிறார்.
9 மாதங்களுக்கு முன்பு தலைவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது கொடிய கொரோனாவின் 2-வது அலை கடுமையாக இருந்த நேரம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வசதிகள் இல்லை. படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை என்று பல இடர்பாடுகள் இருந்தன.
ரூ.6 லட்சம் கோடி கடன்
கொரோனா முதல் அலையின் போது ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் அ.தி.மு.க. இருந்தது. அந்த நேரத்தில் தமிழகத்தில் வெறும் 1 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட 9 மாதங்களில் முதல் மற்றும் 2-ம் தவணைகள் சேர்த்து 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதில் இருந்தே தெரியும் தி.மு.க.தான் மக்களுக்கான ஆட்சியை செய்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியைவிட்டு இறங்கியபோது தமிழகத்தை ரூ.6 லட்சம் கோடி கடனில் விட்டுச்சென்றனர். கொரோனாவிலும் கொள்ளையடித்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாக மட்டும்தான் இருக்கும்.
ரூ.1,000
ஆட்சிக்கு வரும் முன்பே தலைவர் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ரூ.4 ஆயிரத்தை 2 தவணைகளாக வழங்கினார். மகளிருக்கு இலவச பஸ் பயணத்தை தந்தார். இப்போது மகளிரான நீங்கள்தான் பஸ் முதலாளிகள். விரும்பும் இடத்தில் ஏறலாம், நினைத்த இடத்தில் இறங்கலாம். பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 குறைத்தார். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.
அடுத்து மிக விரைவில், நிதி நிலைமை சீரானதும் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தலைவர் உறுதி அளித்து உள்ளார்.
நல்லாட்சி
ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. இதில் 3 மாதங்கள் முழுமையாக கொரோனாவுடன் போராடினோம். மக்களுக்காக உழைத்து வரும் தலைவராக நமது முதல்-அமைச்சர் உள்ளார். இந்த நல்லாட்சியை உள்ளாட்சியிலும் தொடர உதய சூரியனிலும், கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டும்.
2 நாட்களாக முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் சட்டமன்றத்தை முடக்குவதாக பேசி வருகிறார். இது கூவத்தூரில் மேஜைக்கு அடியில் சென்று பெற்ற பதவி இல்லை. மக்களின் அன்பை பெற்று, ஆதரவை பெற்று, வாக்குகளை பெற்று அடைந்த வெற்றி. உங்கள் உருட்டல், மிரட்டல் மு.க.ஸ்டாலினிடம் எடுபடாது. அவர் (மு.க.ஸ்டாலின்) மிசாவையே பார்த்தவர்.
வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் நமது வேட்பாளர்களை கவுன்சிலர்களாக மாமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள். உங்களை அன்போடு, பண்போடு, பாசத்தோடு, உரிமையோடு, உங்கள் வீட்டு பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக கேட்டுக்கொள்கிறேன். உதயசூரியனுக்கும், கூட்டணி கட்சி சின்னங்களுக்கும் வாக்களியுங்கள்
இவ்வாறு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
ஜாலியாக...
அவர் பேசும்போது மிகவும் ஜாலியாக மக்களிடம் கலந்துரையாடினார். மக்களின் கேள்விகளுக்கு அவற்றை கேட்டு பதில் அளித்தார். பெண்களிடம் என்ன 1000 ரூபா பற்றி கேட்கலியா... என்று அவரே ஜாலியாக கலாய்த்துக்கொண்டு பேசி வாக்காளர்களை கவர்ந்தார். பின்னர் அவர் காளைமாடு சிலை பகுதியிலும் பேசினார். அங்கு ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். ஆனால் ஒலிபெருக்கி வசதி சரியாக இல்லாததால், பலரும் அவரது பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.