குமரியில் தேர்தலுக்காக 1,236 வாக்குச்சாவடிகள் தயார்

குமரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1,236 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

Update: 2022-02-16 20:38 GMT
நாகர்கோவில், 
குமரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1,236 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 250 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.
1,236 வாக்குச்சாவடிகள்
குமரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளுக்கு 356 வேட்பாளர்களும், 4 நகராட்சிகளில் உள்ள 99 வார்டுகளுக்கு 437 வேட்பாளர்களும், 51 பேரூராட்சிகளில் உள்ள 824 வார்டுகளுக்கு 3,573 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 10 லட்சத்து 41 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதற்காக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1,236 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட இருக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் அதாவது ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. நாகர்கோவில் வடலிவிளை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.
வாக்கு எண்ணும் மையங்கள்
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். இதற்காக வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமிபுரம் கல்லூரி ஆகிய 8 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறைகளில் எந்திரங்கள் வைக்கப்பட உள்ள இடங்களில் கட்டங்கள் வரையப்பட்டு, வாக்குச்சாவடிகள் எண்ணும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கூண்டுகள் அமைக்கும் பணியும், தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
3 அடுக்கு பாதுகாப்பு
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார். எஸ்.எல்.பி. பள்ளியில் மட்டும் சுமார் 60 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 வாக்கு எண்ணும் மையங்களிலும் சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டதும் அந்தந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்