2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவலால் மூடப்பட்ட மழலையர் பள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.

Update: 2022-02-16 20:19 GMT
நெல்லை:
கொரோனா பரவலால் மூடப்பட்ட மழலையர் பள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. அழுது அடம்பிடித்த குழந்தைகளை பெற்றோர்கள் சாக்லேட் கொடுத்து அழைத்து வந்தனர்.

பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிப்புக்கான நர்சரி-மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டன.
அதன்பிறகு மற்ற கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டபோதும் மழலையர் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் திறக்கப்படாமல் இருந்தன. கடந்த மாதம் அங்கன்வாடி திறக்கப்பட்டது.

வகுப்புகள் தொடங்கின
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று  குறைந்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதைத்தொடர்ந்து மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து மாணவர்களின் வருகையை முன்னிட்டு பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின. இதற்காக மாணவ-மாணவிகள் காலை 8 மணிக்கு பள்ளிக்கூடங்களுக்கு வர தொடங்கினார்கள். சில மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். பல குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து அழுது அடம் பிடித்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள் சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர்.

வெப்ப நிலை பரிசோதனை
பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் சீருடையில் வந்தனர். சீருடை அணியாமலும் பலர் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளிக்கூட வாசலில் வைத்து உடல் வெப்பநிலையை ஆசிரியர்கள் பரிசோதனை செய்தனர்.
நெல்லை வண்ணார்பேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பின்னர் பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினார்கள்.

152 பள்ளிகள்
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும், மேளதாளங்கள்-பேண்டு வாத்தியங்கள் முழங்கவும் அழைத்து வந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் 152 மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறு குழந்தைகள் முக கவசம் அணிய தேவையில்லை என்பதால் முக கவசம் அணிவதில் பள்ளியில் குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

பெற்றோர்கள் கருத்து
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளிக்குச் செல்ல மறுத்து குழந்தைகள் அடம் பிடித்தனர். பள்ளிக்கூடத்துக்கு வந்தபின் தங்களுடைய நண்பர்களை பார்த்து உற்சாகமடைந்து பாடம் படித்தனர். ஆன்-லைன் வகுப்பைவிட பள்ளிக்கு மாணவர்கள் வந்து பாடம் படிப்பது தான் சிறப்பாக உள்ளது” என்றனர்.

மேலும் செய்திகள்