தியேட்டர்கள்-வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கின- ஓட்டல்களிலும் 100 சதவீதம் அமர்ந்து சாப்பிட்டனர்

நெல்லையில் தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கின. ஓட்டல்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

Update: 2022-02-16 20:09 GMT
நெல்லை:
தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் முழுமையாக நெல்லையில் இயங்கின. ஓட்டல்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

ஊரடங்கில் தளர்வு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேர் மற்றும் உணவு அருந்த வருபவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழுமையாக இயங்கின
அதன்படி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கலாம். வணிக நிறுவனங்களிலும் 100 சதவீதம் மக்கள் வந்து செல்லலாம். கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். நகைக்கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள், யோகா நிலையங்கள் உள்ளிட்டவைகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு முழுமையாக இயங்கின. நெல்லை மாநகர பகுதியில் உள்ள தியேட்டர்களில் நேற்று படம் பார்க்க மக்கள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இதைப்போல் நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் முழுமையாக அனுமதிக்கப்பட்டனர். ஓட்டல்களிலும் முழுமையாக 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

சிறைக்கைதிகள்
கொரோனா பரவல் காரணமாக சிறைக்கைதிகளை உறவினர்கள் மற்றும் யாரும் நேரில் சென்று பார்க்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. வீடியோ கால் மூலம் செல்போனில் பேசிக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக நேற்று முதல் கைதிகளை உறவினர்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டனர். 
இதனால் பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதிகளை பார்க்க உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்