சிறுவர்களுக்கு தண்டனை வழங்கிய வழக்கில் 3 பேருக்கு சிறை

சிறுவர்களுக்கு தண்டனை வழங்கிய வழக்கில் 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது;

Update: 2022-02-16 20:04 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அபினேஷ் (வயது 22), நாராயணசாமி மகன் சிலம்பரசன் (27), செல்லமுத்து மகன் செல்வகுமார் (25) ஆகிய 3 பேரும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி ஒரு கோவில் அருகே இயற்கை உபாதை(மலம்) கழித்த 5 சிறுவர்களை, அந்த இயற்கை உபாதையை கைகளால் அள்ள வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அபினேஷ், சிலம்பரசன், செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுகுறித்த வழக்கு பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), மற்றும் பழங்குடியின (எஸ்.டி.) வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி நேற்று தீர்ப்பளித்தார். சிறுவர்களை இயற்கை உபாதையை அள்ள வைத்த அபினேஷ், சிலம்பரசன், செல்வகுமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்