சார்பதிவாளர் குடும்ப சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்
குறிப்பிட்ட பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்த சார்பதிவாளர் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யும்படி பதிவுத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
குறிப்பிட்ட பணியை தொடர்ந்து செய்ய அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்த சார்பதிவாளர் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஆய்வு செய்யும்படி பதிவுத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சார்பதிவாளர் பணி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக (பொறுப்பு) சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.
பதிவுத்துறை விதிகளின்படி ஓய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 6 மாதத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர், முக்கிய பதவிகளில் இருக்கக்கூடாது. இந்த விதிமுறையின்படி சந்திரசேகர் ஓய்வு பெறும் வரை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக (நிர்வாகம்) பணிபுரிய வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.
விருப்பமான பணியை கோர முடியாது
இந்த உத்தரவை எதிர்த்தும், ஓய்வு பெறும் வரை தன்னை இதே பதவியில் தொடர வேண்டும் என்றும் உத்தரவிடும்படி சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அரசின் பொது ஊழியர், தனக்கு விருப்பமான பணியையோ, பதவியையோ தரும்படி கேட்க முடியாது. பொது அலுவலர்களின் பணியானது, பொதுமக்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட பதவியை விரும்பினால், அங்கு தேவையில்லாத தலையீடுகள் இருக்கும். பதிவுத்துறையில் ஏற்கனவே ஊழல்கள் அதிகம் உள்ளன. மனுதாரர் விரைவில் ஓய்வு பெற இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது.
சொத்துகளை ஆய்வு செய்ய உத்தரவு
மனுதாரரின் இந்த கோரிக்கையானது, நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே மனுதாரரின் பணிப்பதிவேடு தொடர்பான ஆவணங்களையும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் முறையாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இல்லையென்றால் பணி விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையை பதிவுத்துறை ஐ.ஜி. 4 வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.