பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் முத்துநகரை சோ்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜவேல், குவைத்தில் வேலை பார்த்து வருவதால், ஜெயபாரதி தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை 3 மணியளவில் வீட்டின் வராண்டாவில் ஜெயபாரதி இருந்தபோது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.
அவர்கள் ஜெயபாரதியிடம், எங்கள் மாடு இந்தப்பக்கம் வந்ததே பார்த்தீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு ஜெயபாரதி, மாடு எதுவும் நான் பார்க்கவில்லை என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்று கொண்டிருந்தார்.
சிறிதுநேரம் கழித்து மீண்டும் அந்த மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் வீட்டினுள் நுழைந்து ஜெயபாரதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 1½ பவுன் சங்கிலியை பறித்துள்ளார். உடனே, சுதாரித்துக்கொண்ட ஜெயபாரதி மர்ம நபருடன் சண்டையிட்டு சங்கிலிகளை மீட்க முயன்றுள்ளார்.
ஆனால் மர்மநபர் ஜெயபாரதியை இடது கன்னத்தில் நகத்தால் கீறியும், இடது கையில் கடித்தும் காயத்தை ஏற்படுத்தி விட்டு சங்கிலிகளுடன், வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு மர்ம நபருடன் ஏறி தப்பி சென்று விட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதில் காயமடைந்த ஜெயபாரதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணை தாக்கி சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்து சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.