பத்ரகாளியம்மன் கோவில் பெரிய தேரோட்டம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பெரிய தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2022-02-16 19:42 GMT
மேச்சேரி:-
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் மாசிமக திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பெரிய தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
பத்ரகாளியம்மன் கோவில்
மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மாசிமக தேர்த்திருவிழா சக்தி அழைத்தல் மற்றும் கொடியேற்றத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை விநாயகர் சின்ன தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மாசி மக தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பெரிய தேரோட்டம் நேற்று நடந்தது. 
இதையொட்டி நேற்று மாலை விநாயகர் தேரும், பின்னால் பெரிய தேரும் கோவிலில் இருந்து புறப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.
இன்று நிலைக்கு வரும்
தேர்கள் நிலையில் இருந்து புறப்பட்டு, மேற்கு ரத வீதியில் கிராமச்சாவடி அருகில் நிறுத்தப்பட்டது. பின்பு அங்கிருந்து இன்று (வியாழக்கிழமை) விநாயகர் தேர், பெரிய தேர் கோவில் நிலைக்கு வந்து சேரும். 
நாளை (வெள்ளிக்கிழமை) இரவு சத்தாபரணம் நடைபெறுகிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் தாய் வீடான பொங்க பாலியில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அங்கிருந்து அம்மன் வீதி உலா வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்