தாய்ப்பால் கொடுத்தபிறகு புரையேறி 3 மாத குழந்தை திடீர் சாவு
சங்ககிரியில் தாய்ப்பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்டு தாலாட்டிய போது 3 மாத குழந்தை புரையேறி பலியானது.
சங்ககிரி:-
சங்ககிரியில் தாய்ப்பால் கொடுத்து விட்டு தொட்டிலில் போட்டு தாலாட்டிய போது 3 மாத குழந்தை புரையேறி பலியானது.
தாய்ப்பால் கொடுத்த தாய்
சேலம் மாவட்டம், சங்ககிரி வெள்ளக்கரடு சத்யா நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி (வயது 22), கூலித்தொழிலாளி. இவர் சவுந்தர்யா (17) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விதுலியா என்ற 3 மாத பெண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் தாய் சவுந்தர்யா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் உடனேயே குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டி உள்ளார். இந்த நிலையில் குழந்தை தூங்கி விட்டதா என சிறிதுநேரம் கழித்து தொட்டிலை சவுந்தர்யா பார்த்துள்ளார். அப்போது மூக்கில் நுரையும், ரத்தமும் வந்து குழந்தை பேச்சு மூச்சு இன்றி கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சாவு
உடனடியாக குழந்தையை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். மேலும் பலியான குழந்தையை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
17 வயது சிறுமியான சவுந்தர்யாவை, திருமணம் செய்தது தொடர்பாக கணவர் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.