தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-16 19:42 GMT
வேகத்தடைகள் வேண்டும்
தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ராமாக்காள் ஏரிக்கரை அருகில் மதிகோன்பாளையம் பிரிவு சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து நடக்கிறது. அந்த பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. போக்குவரத்து போலீசாரும் அந்த பகுதியில் நிறுத்தப்படுவது இல்லை. அங்கு சிக்னல் விளக்குகளும் கிடையாது. தற்போது போலீசார் அந்த சாலை சந்திப்பில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர். இந்த தடுப்பு வேலிகளை வாகனங்களில் செல்வோர் கண்டுகொள்வதில்லை. எனவே 3 சாலைகள் சந்திக்கும் அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, மதிகோன்பாளையம், தர்மபுரி.
சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்
சேலம் 46-வது வார்டு சீரங்கன் தெருவில் வீடுகளில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இந்த தொட்டியில் குப்பைகளை அள்ளாததால் நிரம்பி சாலையில் சிதறிக்கிடக்கின்றன. மேலும் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபதி, குகை, சேலம்.
பாதியில் நிற்கும் கழிப்பிட பணி
சேலம் மாநகராட்சி 37-வது வார்டு புதுப்பேட்டை அடுத்த குட்டிகரடு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிப்பிட வசதி வேண்டி கடந்த பல ஆண்டுகளாக மனுக்கள் வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு மாநகராட்சியால் கழிப்பிடம் கட்ட தொடங்கி இதுநாள் வரை கட்டுமான பணிகள் முடியாமல் பாதியில் நிற்கின்றன. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பிடம் கட்டி தர வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், குட்டிகரடு, சேலம்.
===
சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் வழியில் கழிவுநீர் செல்லும் கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகின்றன. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-ராம், சேலம்.
தெருநாய்கள் தொல்லை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி மெயின் ரோட்டில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்லும்போது தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாவித்திரி, பென்னாகரம், தர்மபுரி.
===
மது அருந்தும் இடமாக மாறிய தண்டவாளம்
சேலம் சத்திரம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் ஆபத்தை உணராமல் மது அருந்துகிறார்கள். பின்னர் அவர்கள் மது பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் தண்டவாளம் மது அருந்தும் இடமாகவே மாறி விட்டது போன்று காட்சி அளிக்கிறது. அப்படி மது அருந்தும் நபர்கள், காந்தி விளையாட்டு மைதானம் பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார் எழுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
-ரமேஷ், சேலம்.

மேலும் செய்திகள்