சுயேச்சை வேட்பாளர் கடையில் 134 மூட்டை அரிசி பறிமுதல்

திருச்சியில் சுயேச்சை வேட்பாளர் கடையில் 134 மூட்டை அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவை வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-02-16 19:28 GMT
திருச்சி, பிப்.17-
திருச்சியில் சுயேச்சை வேட்பாளர் கடையில் 134 மூட்டை அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவை வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறக்கும் படை சோதனை
திருச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் இதுவரை 1.80 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக இதுவரை புகார் வரவில்லை என்றும், எந்த ஒரு பரிசு பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் ஏற்கனவே கலெக்டர் தெரிவித்திருந்தார். இருப்பினும் வேட்பாளர்களால் குறிப்பிட்ட இடங்களில் பணம், மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுதான் வருகிறது.
அரிசி மூட்டை பறிமுதல்
திருச்சி மாநகராட்சி 47-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் முகமது ஜியாவுதீன். இவர் தனது பெட்டிக்கடையில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி சபிதா ஆனந்த் தலைமையிலான குழுவினர் சுயேச்சை வேட்பாளர் முகமது ஜியாவுதீன் பெட்டிக்கடைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு மூட்டைகளில் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
10 கிலோ எடை கொண்ட 73 பைகள், 25 கிலோ எடை கொண்ட 61 மூட்டை என அரிசி இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1¼ லட்சம் ஆகும்.
தொடர் விசாரணை
தேர்தல் பிரசாரத்திற்கு இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பதால், வாக்காளர்களை கவர்வதற்காக கடையில் பதுக்கி அரிசி விநியோகிக்க வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து பறக்கும் படையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்