சினிமா தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
சினிமா தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கரூர்
100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. மேலும் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியது. இதனைதொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. அதன்படி திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. கரூரில் உள்ள திரையரங்குகளில் மிக குறைந்த அளவிலான பொதுமக்களே தியேட்டருக்கு வந்து படங்களை கண்டுகளித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு...
இதுகுறித்து சினிமா தியேட்டருக்கு வந்த சேலத்தை சேர்ந்த மோகன் குமார் கூறியதாவது:- நான் கரூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நாள்தோறும் வேலைக்கு செல்வதால் பொழுதுபோக்கு என்று வேறு எந்த நிகழ்வுக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் 100 சதவீத இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு படம் பார்க்க வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையை சேர்ந்த மதன் கூறியதாவது:- கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். கொரோனா தொற்று காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரை அரங்குகளில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் படம் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம் குறைவு
இதுகுறித்து திரையரங்க மேலாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் மொத்தம் 13 திரையரங்குகள் உள்ளன. இதில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 திரையரங்குகள் உள்ளன. நேற்று முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திரையரங்குகளில் முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மிக குறைவான அளவிலான பார்வையாளர்களே வந்திருந்தனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதுடன், பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு உள்ளதால் கூட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. தேர்தலுக்கு பிறகே கூட்டம் வரும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டல்கள்
இதேபோல் ஓட்டல்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கருப்பசாமி கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 சதவீதம் பேர் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது படிப்படியாக நோய்தொற்று குறைந்து வரும் நிலையில் நேற்று முதல் உணவகங்களில் 100 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்று முற்றிலும் நோய்த்தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறவேண்டும். இதற்கு அனைத்து மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
வணிக நிறுவனங்கள்
இதேபோல் மால்கள், வணிக நிறுவனங்களில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறைகளுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.