புதுக்கோட்டை மாவட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறப்பு மாணவர்கள் ஆர்வமுடன் வந்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் வகுப்புக்கு வந்தனர்.
புதுக்கோட்டை:
நர்சரி பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நர்சரி பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் பல அளிக்கப்பட்டன. அதன்படி, நர்சரி பள்ளிகள் நேற்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நர்சரி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இதில் பெரும்பாலானவை தனியார் பள்ளிகள் ஆகும். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. மாவட்டத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள் மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர்.
குழந்தைகள் அழுதனர்
புதுக்கோட்டையில் சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இதேபோல புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறையில் அமர வைத்தனர். குழந்தைகள் சீருடையுடன், முதுகில் புத்தக பையை மாட்டியபடியும், சிலர் முக கவசம் அணிந்தும் வந்தனர். வகுப்பறையில் அமரும் வரை மாணவ-மாணவிகளின் பெற்றோர் உடன் இருந்தனர்.
வகுப்பறையில் விட்ட பின் பெற்றோர் புறப்பட தொடங்கியதும் குழந்தைகள் பல அழத் தொடங்கின. வகுப்பறையை விட்டு ஆளுக்கு ஒரு புறமும் வெளியே வரத்தொடங்கினர். இதனால் ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்தனர். அதேநேரத்தில் பெற்றோரும் உடனே வந்து குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்கி சமாதானப்படுத்தினர். அதன்பின் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்தனர்.
குழந்தைகள் மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மேலும் ஆசிரியைகள் கைத்தட்டியும், நடனமாடியும் குழந்தைகளை மகிழ்வித்தனர். முதல் நாள் வகுப்பு என்பதால் குழந்தைகள் பல பயந்தன. அதேநேரத்தில் சில குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடின. இதேபோல மழலையர் விளையாட்டு பள்ளிகளும் திறக்கப்பட்டன.
கறம்பக்குடி
கறம்பக்குடி தாலுகா பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மற்றும் தனியார் மழலை பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்திருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக மழலையர் பள்ளிகள் செயல்படாத நிலையில் அதில் படித்த குழந்தைகள் சிலர் தொடக்கப்பள்ளிகளில் சேர்ந்து விட்டனர். புதிதாக சேர்ந்த குழந்தைகள் பெற்றோருடன் நேற்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்றனர். சக நண்பர்களுடன் பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, அரிமளம், அறந்தாங்கி, பொன்னமராவதி, கீரமங்கலம், ஆலங்குடி, திருமயம், இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் தனியார் மழலை பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்திருந்தனர்.