அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கிரிவலத்திற்கு தடை
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 11.30 மணி அளவில் நிறைவடைந்தது.
இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
பக்தர்கள் கூட்டம்
இருப்பினும் பக்தர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தனித் தனியாக கிரிவலம் செல்ல தொடங்கினர்.
கிரிவலப்பாதையில் இரவு 10 மணிக்கு மேல் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
தொடர்ந்து 2-ம் நாளான நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் குறைந்த அளவிலான பக்தர்களே காணப்பட்டனர்.
பவுர்ணமியையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.