சொத்து குவிப்பு, வெளிநாடு சென்றதாக புகார் அமிதாப் பச்சனுக்கு மெய்காவலராக பணியாற்றிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு மெய்காவலராக பணியாற்றிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-02-16 18:16 GMT
கோப்பு படம்
மும்பை,
நடிகர் அமிதாப்பச்சனுக்கு மெய்காவலராக பணியாற்றிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததும், அனுமதியின்றி வெளிநாடுகள் பயணித்ததும் தெரியவந்துள்ளது. 
மெய்காவலராக பணியாற்றியவர்
இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரது பாதுகாப்பு பணிக்காக மும்பை போலீஸ் துறை சார்பில் 4 போலீசார் நியமிக்கப்பட்டு மெய்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். ஜிதேந்திரா ஷிண்டே என்ற போலீஸ்காரர் 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் அமிதாப் பச்சனின் மெய்காவலர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஜிதேந்திர ஷிண்டே வருமானத்தை மீறி சம்பாதித்ததும், அவரது ஆண்டு வருமானம் ரூ.1 கோடியே 50 லட்சம் எனவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் டி.பி. மார்க் போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். 
இடை நீக்கம்
இந்தநிலையில் போலீஸ்காரர் ஜிதேந்திர ஷிண்டே திடீரென நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை எடுத்த மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே, போலீஸ்காரர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக மும்பை (தெற்கு) கூடுதல் கமிஷனர் திலீப் சாவந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
பணி விதிமுறை மீறல் காரணமாக ஜிதேந்திர ஷிண்டே பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமானால் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ஜிதேந்திர ஷிண்டே எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் பணி விதிமுறையை மீறி குறைந்தபட்சம் 4 முறை துபாய், சிங்கப்பூர் சென்றுள்ளார்” என்றார்.
சொத்து குவிப்பு
ஜிதேந்திர ஷிண்டே மனைவி பெயரில் தனியார் பாதுகாப்பு ஏஜென்சி நடத்தி வந்ததும், அந்த ஏஜென்சி மூலம் அமிதாப் பச்சனின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்ததும் தெரியவந்தது. ஆனால் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் ஜிதேந்திர ஷிண்டேயின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சில சொத்துகளை வாங்கி குவித்ததை மறைத்ததும் தெரியவந்தது. 
இதுபோன்ற புகார்களின் அடிப்படையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அமிதாப் பச்சனுக்கு மெய்காவலராக பணியாற்றிய போலீஸ்காரர் புகாரில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்