தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-16 18:03 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மேலசிந்தாமணி நாட்டார் சந்திலிருந்து பாதாள சாக்கடை இணைப்பு பழைய கரூர் ரோட்டில் இணைகிறது. மேற்படி இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு எதிரே உள்ள தெருக்களிலும், வீடுகளின் உள்ளேயும் சாக்கடை நீர் வடிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் தொட்டியை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாகராஜன், திருச்சி.

நூலகத்தை திறக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், எளமணம் பகுதியில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தகங்கள் படிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நூலகத்தை பராமரிப்பு செய்து திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வையம்பட்டி.


சாய்ந்த நிலையில் மின்கம்பம்
திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பாய் கடை சந்து பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் அந்த வழியாக வந்த ஒரு லாரி மோதி தற்போது சாயும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிகண்டன், காந்திமார்க்கெட்,  திருச்சி.

தேங்கி நிற்கும் சாக்கடை
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுநாள் வரை அந்த பள்ளத்தை மூடவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகேஷ்வரன், துறையூர்.

துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை 
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் கொப்பம்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து சோபனபுரம், பச்சமலை, ஓசரப் பள்ளி ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் அதிகரித்துள்ளதால் விவசாய நிலங்களில் மின் மோட்டாருக்கு மின்சாரம் குறைந்து வருகிறது. இதனால்  மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே சோபனபுரம் பகுதிக்கும், பச்சமலை தென்புறநாடு ஊராட்சிக்கும் தனித்தனியாக துணை மின் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயராஜ், துறையூர்.

மேலும் செய்திகள்