ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் கரூரில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் கரூரில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஓட்டல்
சிவகங்கை ராமசாமி நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 39). இவரது தம்பி மணிவண்ணன் (28). இவர்கள் 2 பேரும் சேர்ந்து சிவகங்கை மேலூர் ரோட்டில் ஓட்டல் ஒன்றை திறந்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அண்ணன், தம்பி 2 பேரும் கடையில் இருந்தனர். அப்போது வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கடையில் இருந்த மணிவண்ணனை வாளால் வெட்டினர். இதை பார்த்து தடுக்க வந்த இளங்கோவிற்கும் வெட்டு விழுந்தது. தொடர்ந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த அண்ணன்- தம்பி 2 பேரையும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தூக்கி சென்றனர்.
விசாரணை
ஆனால் செல்லும் வழியிலேயே மணிவண்ணன் இறந்து போனார். இளங்கோ ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக சக்திவேல் (வயது27), புலி கார்த்திக் (26), மைக்கேல் (27), வெற்றிவேல் (25) உள்பட 10 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவகங்கை நகரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(25), அவரது தம்பி வெற்றிவேல்(19), கார்த்திக்ராஜா (26), கொட்டகுடியை சேர்ந்த ஆகாஷ்(19) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கோர்ட்டில் சரண்
போலீசாரின் தீவிர தேடுதலையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மானாமதுரையை அடுத்த ராஜகம்பீரத்தை சேர்ந்த மைக்கேல் என்ற மகாலிங்கம்(27), சிவகங்கை போஸ் ரோடு பகுதியை சேர்ந்த சரவணன்என்ற சரவணகுமார்(27), சிவகங்கை தொண்டி ரோடு பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன்(20) மற்றும் புதுபட்டியை சேர்ந்த மதன் என்ற மதன்குமார்(19) ஆகிய 4 பேர் கரூரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.