தியாகதுருகம் அருகே ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் முழு சம்பளம் வழங்கக்கோரிக்கை

தியாகதுருகம் அருகே ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் முழு சம்பளம் வழங்கக்கோரிக்கை

Update: 2022-02-16 17:23 GMT
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு வாரமும், காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு வாரமும் என தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கூத்தக்குடி காலனி பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். பின்னர் வேலை முடிந்ததும் ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த ஊர் பகுதியை சேர்ந்த தொழிரலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் ரூ.150 சம்பளம்தான் வழங்குவார்கள் என நினைத்து ஆத்திரம் அடைந்த காலனி பகுதி தொழிலாளர்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.273 முழு சம்பளத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்று தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்