மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி
மாசி மகத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்,
மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தை மாசிமகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து மினி லாரி, டிராக்டர் போன்ற பல்வேறு வாகனங்களில் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்து தீர்த்தவாரி நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மாத பவுர்ணமியான நேற்று கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து டிராக்டர், மினி லாரி போன்ற பல்வேறு வாகனங்களில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு ஆனைக்குப்பம் முத்துநாகம்மன் உற்சவ மூர்த்தியும், அதன்பிறகு செல்லங்குப்பம் முத்துமாரியம்மனும் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
சாமிகளுக்கு தீர்த்தவாரி
தொடர்ந்து கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், திருமாணிக்குழி முத்துமாரியம்மன், தேவனாம்பட்டினம் முத்தாலம்மன், சித்திவிநாயகர், வெள்ளகாளியம்மன், விநாயகர், புதுச்சேரி பாகூர் பூலோகமாரியம்மன், நவநீதம்நகர் சோலைமுத்துமாரியம்மன், கூத்தப்பாக்கம் ராமானுஜம்நகர் சமயபுரத்து மாரியம்மன், செம்மண்டலம் முத்துமாரியம்மன், நத்தப்பட்டு மாரியம்மன், ஆனைக்குப்பம் மாரியம்மன், புதுப்பாளையம் கருமாரியம்மன் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்றவற்றில் அமர்த்தி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
மாசி மக திருவிழாவை காண கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கடலில் புனித நீராடி, கடற் கரையில் இருந்த சாமிகளை தரிசனம் செய்து விட்டு சென்றனர். நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. சிலர் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.
போக்குவரத்து நெரிசல்
கடலூர் தேவனாம்பட்டினம் 4 முனை சந்திப்பு பிறகு உற்சவ மூர்த்திகளை கொண்டு சென்ற வாகனத்தை தவிர மற்ற வாகனங்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். மாசி மகத்தை காண வந்த பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.
முன்னதாக பல்வேறு இடங்களில் இருந்து சாமி சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டதால், நகரின் முக்கிய சாலைகளில், அதாவது பாரதிசாலை, இம்பீரியல் ரோடு, சில்வர் பீச் ரோடு, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை முதல் சில்வர் பீச் வரை பொதுமக்கள் புனித நீராடினர். கடலில் ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரட்டி விட்டனர். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர். விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கிறது.