‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-02-16 17:08 GMT
திண்டுக்கல்: 


‘தினத்தந்தி’க்கு நன்றி 
குஜிலியம்பாறை அருகே தி.கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட கலிங்கப்பட்டி கடைவீதியில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக குப்பைகள் அகற்றப்பட்டன. இதற்காக தினத்தந்திக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 
-சண்முகம், கலிங்கப்பட்டி.

மேம்பாலத்தின் சுவர் சேதம் 
திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் சேதமான நடைபாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மேம்பாலத்தின் கைப்பிடி சுவர் பல இடங்களில் சேதம் அடைந்து இருக்கிறது. எனவே அதையும் சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கோவிந்தராஜ், திண்டுக்கல்.

குப்பைகள் தீவைத்து எரிப்பு 
வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகளை மொத்தமாக கொட்டி தீவைத்து எரிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியேறும் கரும்புகை சாலை வரை பரவுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். 
-தமிழ்பிரியன், வேடசந்தூர்.

நிரம்பி வழியும் குப்பைகள் 
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டியில் குப்பைகள் தினமும் அள்ளப்படுவது இல்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. மேலும் குப்பை தொட்டியின் அருகில் குப்பைகளை கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. எனவே குப்பைகளை தினமும் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-செல்வக்குமார், கன்னியப்பபிள்ளைபட்டி.

சாலை ஓரத்தில் அபாய பள்ளம்
ஆத்தூர் தாலுகா சித்தரேவில் இருந்து பெரும்பாறை செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருக்கிறது. இதனால் பெரிய வாகனங்கள் எதிரே வரும் போது பிற வாகனங்கள் ஒதுங்குவதற்கு சிரமமாக இருக்கிறது. மேலும் ஆபத்தான வளைவு உள்ள இடத்தில் சாலையின் ஓரத்தில் அபாய பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், ஆத்தூர்.

மேலும் செய்திகள்