தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மேலசிந்தாமணி நாட்டார் சந்திலிருந்து பாதாள சாக்கடை இணைப்பு பழைய கரூர் ரோட்டில் இணைகிறது. மேற்படி இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு எதிரே உள்ள தெருக்களிலும், வீடுகளின் உள்ளேயும் சாக்கடை நீர் வடிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் தொட்டியை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாகராஜன், திருச்சி.
அடிபம்பு சீரமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிழக்கு எல்லை சந்து பாதையில் அடிபம்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த அடிபம்பு பழுதடைந்து சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அடிபம்பை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
ஆழ்குழாயை மூட கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே ஆழ்குழாய் அமைத்து அதன் மேல் அடிபம்பு அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அடிபம்பு பழுதானதால் அகற்றப்படது. அதன் பின்னர் அந்த ஆழ்குழாயை மூடாமல் அப்படியே உள்ளது. இந்த ஆழ்குழாய் இருக்கும் இடத்தின் அருகே நகராட்சி தொடக்க பள்ளி உள்ளது. ஆழ்குழாய் மூடாமல் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தற்காப்பிற்காக ஆழ்குழாய் மீது கல் வைத்து மூடி வைத்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் ஆழ்குழாயை நிரந்தரமாக அல்லது பாதுகாக்க மூடி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அறந்தாங்கி.
கழிவுநீரால் துர்நாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, மரவமதுறை ஊராட்சி சடையம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு சென்று வருகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொன்னமராவதி.
நூலகத்தை திறக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், எளமணம் பகுதியில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலகம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தகங்கள் படிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நூலகத்தை பராமரிப்பு செய்து திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வையம்பட்டி.