கடலூர் அருகே ஊரக வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கடலூர் அருகே ஊரக வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.;
கடலூர்,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அலுவலர்கள் இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மருதாடு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
அதன்பிறகு அழகியநத்தம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் நீர் உறிஞ்சு குழி அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் தணிகாசலம், உதவிசெயற்பொறியாளர் முகமது யாசின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.