பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 98 நுண் பார்வையாளர்கள் நியமனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 98 பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 98 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 91 இடங்களில் வெப்கேமரா பொருத்தப்படுகிறது.;
திண்டுக்கல்:
பதற்றமான வாக்குச்சாவடிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 747 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் 149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன.
இதற்கிடையே 8 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகினர். எனவே மீதமுள்ள 478 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் 737 ஆக குறைந்தது. இந்த நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பழைய பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் மேலும் 40 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன.
நுண் பார்வையாளர்கள்
இதனால் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்தது. அதில் 91 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் 91 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நாளில் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் பார்க்கலாம்.
மேலும் 98 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அதோடு அந்த 98 வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க தலா ஒருவர் என மொத்தம் 98 நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.