ராணுவ வீரர் வெட்டிக்கொலை: மனைவி உள்பட 5 பேர் கோர்ட்டில் சரண்
காவேரிப்பட்டணம் அருகே ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
காவேரிப்பட்டணம்:
ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 40). இவர் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
இந்தநிலையில் கடந்த 6.3.2021 அன்று நரேஷ்குமார் தனது மாமனார் மகாலிங்கத்தை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக ராணுவ வீரர் நரேஷ்குமார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நரேஷ்குமாருக்கும், அவருடைய மனைவி சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
வெட்டிக்கொலை
கடந்த 13-ந் தேதி பண்ணந்தூர் கிராமத்திற்கு வந்த நரேஷ்குமார், சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவரை கட்டையால் தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கொலை தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சசிகலா, முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), இவருடைய மனைவி தீபா (35), திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மகேஸ்வரன் (30), இவருடைய மனைவி ராஜகுமாரி (27) மற்றும் வடிவேல் (30), சதீஷ் (27) ஆகியோர் நரேஷ்குமாரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
5 பேர் சரண்
இந்தநிலையில் சசிகலா நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும், பரமேஸ்வரன், மகேஸ்வரன், வடிவேல், சதீஷ் ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் பாபு முன்பு நேற்று சரண் அடைந்தனர். மேலும் தீபா, ராஜகுமாரி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.