கிருஷ்ணகிரி அருகே மரத்தில் மொபட் மோதியதில் 2 தொழிலாளர்கள் சாவு
கிருஷ்ணகிரி அருகே மரத்தில் மொபட் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
கிருஷ்ணகிரி:
தொழிலாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக பழையூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.
மொபட்டை லட்சுமணன் ஓட்டினார். கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் பூவத்தி அருகே கோவிந்தன்கொட்டாய் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மொபட் திடீரென மோதியது.
2 பேரும் பலி
இந்த விபத்தில் லட்சுமணன், முருகன் தலையில் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் லட்சுமணன், முருகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் உறவினர்களும் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.