தளியில் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி-மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

தளியில் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார். மேலும் தண்ணீரில் மூழ்கிய மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது.;

Update: 2022-02-16 16:46 GMT
தேன்கனிக்கோட்டை:
2 தொழிலாளர்கள்
தளி அத்தலவாடி சாலையை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). திப்பேன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (40). இவர்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் தளி பெரிய ஏரிக்கு மீன் பிடிக்க சென்றனர். அங்கு தண்ணீரில் இறங்கி மீன் பிடித்தபோது, 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்தவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையம், தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் ஏரியில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். சிறிது நேரத்தில் தொழிலாளி ராஜப்பா பிணமாக மீட்கப்பட்டார். நாகராஜை தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை. வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 
இதையடுத்து போலீசார் ராஜப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலாளி நாகராஜை தேடும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்