தியாகதுருகம் அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் தவறி விழுந்ததால் ஆத்திரம்
தியாகதுருகம் அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் தவறி விழுந்ததால் ஆத்திரம்
கண்டாச்சிமங்கலம்
பள்ளி மாணவர்கள்
தியாகதுருகம் அருகே உள்ள பொரசக்குறிச்சி மற்றும் கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விருகாவூர் மற்றும் நாகலூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் பொரசக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பள்ளிகளுக்குச் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கொளவாய் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி சென்று கொண்டிருந்தனர்.
தவறி விழுந்தனர்
காலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் சில மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தனர். விருகாவூர் அருகே பஸ் வந்தபோது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவர்கள் தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் நேற்று பொரசக்குறிச்சி பஸ் நிறுத்தத்துக்கு வந்த கொளவாய்-கள்ளக்குறிச்சி அரசு பஸ்சை வழிமறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொரசக்குறிச்சியில் இருந்து பள்ளிக்கு சென்றுவர கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தனது சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் வந்த ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது ஒரு சில நாட்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று மறியலை கைவிட்ட மாணவ-மாணவிகள் பின்னர் அதே அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்றனர்.
இதனால் கொளவாய்-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் பஸ்வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பொரசக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.