பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்

விளாத்திகுளம் அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது

Update: 2022-02-16 14:04 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
கோவில் மாசித்திருவிழா
விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரெட்டியாபுரத்தில்  350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.
 இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு இங்கு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 
இந்த மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தேன், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தேரோட்டம்
இதனைத்தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல்... வீரவேல்..." என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பின் கோவிலை வந்தடைந்தது.  
விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர். இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா, தக்கார் இசக்கி செல்வம் மற்றும் கணக்காளர் மகாராஜா ஆகியோர்  செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்