லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் 2 பேர் பலி
மங்கலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
விசைத்தறி தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்வயது 26. திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பிரதீப் தனது உறவினர் பழனியம்மாள் 50 மற்றும் பழனியம்மாளின் மகன்களான சஞ்சய்14, சரவணன்12 ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மங்கலம் வழியாக சென்றார்.
இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு ஆட்டோவை பிரதீப் முந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி மங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த லாரி மீது இவர்களது ேமாட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். பழனியம்மாளின் கால் துண்டானது. பழனியம்மாளின் மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோரும் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த இடத்திற்கு மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு உடனே பழனியம்மாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய், சரவணன் ஆகியோரை திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பலியானார். சஞ்சய், சரவணன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்கலம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.